#1072 பொன் கன்றுக்குட்டி என்ற விக்கிரகத்தை உருவாக்க காரணமாயிருந்த ஆரோனை தேவன் ஏன் தண்டிக்கவில்லை?

#1072 *பொன் கன்றுக்குட்டி என்ற விக்கிரகத்தை உருவாக்க காரணமாயிருந்த ஆரோனை தேவன் ஏன் தண்டிக்கவில்லை?*

*பதில்* : தங்கள் பிரச்சனையை ஜீவனுள்ள தேவனிடத்தில் அழுது, கூக்குரலிட்ட (யாத். 3:7) இஸ்ரவேல் ஜனங்கள், சுமார் 400 வருடங்களாக எகிப்திய விக்கிரகங்களுக்கு நடுவே வாழ்க்கையை தலைமுறை தலைமுறையாய் கடந்தவர்கள்; தங்களுக்கு ஒரு பிரச்சனையான சூழல் வருவதாக நினைத்த பொழுது அந்த ஜீவனுள்ள தேவனை தேடுவதை விட்டு விசுவாசம், நம்பிக்கை போன்ற எந்த சொற்களும் இருதயத்தில் எழாமல், அவர்களுக்கு தாங்கள் வாழ்ந்த சூழலின் பழக்கமே முன்வந்திருக்கிறது என்பதை இது நமக்கு கற்பிக்கிறது.

தேவனின் அழைப்பை ஏற்று மலைக்கு ஏறிச் சென்ற மோசே, திரும்பி வரத் தாமதமானதால் இஸ்ரவேல் ஜனங்கள் மோசேயின் ஸ்தானத்தில் தங்களுக்கு ஒரு தெய்வத்தை தேடினார்கள். யாத். 32:1

ஆரோனை இஸ்ரவேல் ஜனங்கள் தீவிரமாய் வற்புறுத்தியிருக்கவேண்டும். யாத். 32:22

அவர்களது அந்த வற்புறுத்தலுக்கு எதிராய் ஜீவனுள்ள தேவனிடத்தில் அச்சூழலை ஒப்புக்கொடுக்காமல் தானாக ஒரு தீர்மானத்தை எடுத்து ஜனங்களின் விருப்பத்திற்கு சம்மதித்திருக்கிறார். யாத். 32:1-2

இச்செயல் மூலம் ஆரோன், ஒரு நல்ல தலைவன் அல்ல என்பது நிரூபணம் ஆகிறது. காதுகளில் போட்டிருந்த பொன்னணிகளைக் கொண்டு ஒரு கன்றுக்குட்டியை ஆரோன் வார்ப்பிக்கிறான். யாத். 32:3-4

வார்ப்பித்த பொழுது; ஜனங்கள் அறிவித்துக்கொண்டது என்னவென்றால் ”இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்றார்கள்”.  யாத். 32:4

உடனடியாக, ஆரோன் அந்த கன்றுக்குட்டிக்கு முன்பாக ஒரு பலிபீடத்தையும் கட்டி மறுநாளில் *கர்த்தருக்குப்* பண்டிகை என்று அறிவிக்கிறார். யாத். 32:5

மோசேக்கு என்ன ஆனதோ என்ற கவலையை மறந்து இப்பொழுது மறுநாளில் தானே அந்த விக்கிரகத்திற்கு முன்பாக சர்வாங்க தகனபலிகளையிட்டு, சமாதானபலிகளைச் செலுத்தி; புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து, விளையாடவும் ஆரம்பித்து களியாட்டு நடக்கிறது. யாத். 32:6

இந்த செயலின் நிமித்தம் ஆரோன் உட்பட (உபா. 9:20) அனைவரையும் கொன்றுபோட தேவன் தனது கோபத்தில் எழும்பினார். யாத். 32:9-12, உபா. 9:8, 12-14.

அப்பொழுது மோசே ஜனங்களுக்காகவும், ஆரோனிற்காகவும் (உபா. 9:20) நாற்பது  நாள் இரவும் பகலும் கர்த்தருக்கு முன்பாக விழுந்து அப்பம் புசிக்காமல் தண்ணீர் குடியாமல் மன்றாடினார். உபா. 9:18

மோசேயின் மன்றாட்டிற்கு இணங்கி தேவன் ஆரோனை தண்டிக்காமல் விட்டார் என்பதை நாம் அறிகிறோம்.

*நமது பாடம்* : எந்த சூழலிலும் தேவன் என்றோ, இயேசு என்றோ, சீஷர்கள் என்றோ, பரிசுத்தவான்கள் என்றோ, இறந்துபோன அப்பா, பாட்டி, குழந்தை, பாஸ்டர், மரியாள், யோசேப்பு, ஃபாதர், ரெவரென்டு(?), போப் என்று எவரது படத்தையும், விக்கிரகத்தையும் வைத்து வழிபடக்கூடாது. அது பாவம் !! தேவன் அவர்களை தண்டியாமல் விடார். அவை அனைத்தையும் தூர எறிந்து விட்டு இன்றும் நமக்காய் தேவனிடத்தில் பரிந்து பேசிக்கொண்டிருக்கும் இயேசு கிறிஸ்துவின் சத்தியத்தை முறையாய் கேட்டு, விசுவாசித்து, பாவத்தை விட்டு மனந்திரும்பி, விசுவாசத்தை அறிக்கையிட்டு, பாவமன்னிப்பிற்கென்று ஞானஸ்நானம் பெற்று உண்மையான தேவனை தொழுதுக்கொள்ள வேண்டும். அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள். யாத். 20:3-5, மாற்கு 16:16

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் – கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*—-*—-*—-*—-*—-*—–*