#1010 மூலைக்கல் என்றால் என்ன?

#1010 *மூலைக்கல் என்றால் என்ன?*

*பதில்* : ஒரு மூலைக்கல் அல்லது கோடிக்கல் என்பது எந்த ஒரு கட்டிடத்தின் துவக்கத்திற்கென அடித்தளத்தின் கட்டுமானத்தில் அமைக்கப்பட்ட முதல் கல் ஆகும். நில ஆவணம் மற்றும் சர்வே புள்ளிகளின்படி ஒரு குறிப்பிட்ட திசையில் ஒரு கட்டிடத்தை நோக்குநிலைப்படுத்துவதன் மூலம் ஒரு மூலைக்கல் புவியியல் இருப்பிடத்தைக் குறிக்கிறது. அஸ்திபாரக் கல் என்றும் அழைக்கப்படுகிறது.

மற்ற அனைத்து கற்களும் இந்த கல்லைக் குறிக்கும் வகையில் அமைக்கப்படும், இதனால் முழு கட்டமைப்பின் நிலையும் இதனைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது.

ஒரு மூலைக்கல் முதன்மையான கல், பொதுவாக ஒரு கட்டிடத்தின் மூலையில் வைக்கப்பட்டு, மற்ற தொழிலாளர்கள் தங்களது வேலையை தொடர்ந்து அதன் மீது கட்டுவதற்கு வழிநடத்தும்.

மூலக்கல்லானது பொதுவாக மிகப் பெரியதாகவும், திடமானதாகவும், மிகவும் கவனமாகக் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றாகவும் இருக்கும்.

தனது சபையை கட்டுவதற்கான மூலைக்கல்லாக இயேசுகிறிஸ்து குறிக்கப்படுகிறார். அவரே அடித்தளமானவர். மூலக்கல்லை அமைத்தவுடன், மீதமுள்ள கட்டுமானத்தில் ஒவ்வொரு அளவீட்டையும் தீர்மானிப்பதற்கான அடிப்படையாக அது அமைந்தது; எல்லாம் அதனுடன் சீரமைக்கப்பட்டது. தமது சபையின் (கட்டிடத்தின்) மூலக்கல்லாக, இயேசு கிறிஸ்து நமது அளவு மற்றும் சீரமைப்புக்கான தரமாக இருக்கிறார்.

ஏசாயா புத்தகத்தில் வரவிருக்கும் மேசியாவைப் பற்றிய பல குறிப்புகள் உள்ளன. தீர்க்கதரிசனத்தில் பல இடங்களில் மேசியா “மூலைக்கல்” என்று குறிப்பிடப்படுகிறார். ஏசாயா 28:16-17.

புதிய ஏற்பாட்டில், மூலக்கல்லுக்கான உருவகம் தொடர்கிறது. எபேசிய கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவை நன்கு அறிந்துகொள்ள வேண்டும் என்று அப்போஸ்தலன் பவுல் விரும்புகிறார். எபேசியர் 2:19-21

மேலும், 1 பேதுரு 2:6 இல், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஏசாயா கூறியது அதே வார்த்தைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இயேசு, நமது மூலைக்கல்லாக, “தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்” என்று பேதுரு கூறுகிறார் (1 பேதுரு 2:4).

மூலைக்கல் நம்பகமானது, “அவரை நம்புகிறவன் வெட்கப்படுவதில்லை” அதாவது அந்தக்கல்லின் மீது கட்டப்படுபவர்கள் தள்ளப்படுவதில்லை (1பேதுரு 2:6).

இந்த மூலைக்கல், எல்லை ஓரத்தில் வைக்கப்பட்டு இந்த கல்லை பின்பற்றியே  முப்பரிமானத்தில் – இதன் மேலேயும், இடது வலதுபுறமும் கட்டிடம் மேலே எழும்பக் கட்டப்படுகிறது. விளக்கப்படத்தைக் காணவும்.

நியாயபிரமாணத்தை சிலுவையில் முடித்து வைத்து (ரோ. 10:4, 3:25-31, 8:3-4; ஏசா. 53:11; மத். 5:17-18; யோ. 1:17; அப். 13:38-39; 1கொரி. 1:30; கலா. 3:24; கொலோ. 2:10, 2:17; எபி. 9:7-14, 10:8-12, 10:14) விசுவாசப் பிரமாணமான கிறிஸ்தவம் என்ற மாளிகைக்கு முதல் கல்லாக கிறிஸ்துவே வைக்கப்பட்டுள்ளார். அந்த கல்லின் மேல் (கிறிஸ்துவின் மேல்) அனைவரும் ஒவ்வொரு கல்லாக வைக்கப்பட்டு அவர் மேலே கட்டியெழுப்பப்படுகிறோம்.

அதாவது, அவர் கொடுத்த சத்தியத்தின் மேலே அச்சு பிறழாமல், திசை மாறாமல், அவரது எல்லையை விட்டு விலகாமல், மூலைக்கல்லான கிறிஸ்துவின் அதே வழியில் அல்லது திசையில் ஒரே நேர்கோட்டில் அனைத்து பக்கங்களிலும் கட்டியெழுப்பப்படுகிறோம்.

அவரது கோணத்தை விட்டு சற்று விலகிச் சென்றாலும் அந்த கட்டிடத்தின் பங்காக கருதப்பட இயலாமல் கூடுதலாய் அந்த மூலைக்கல்லிற்கு வெளியில் காணப்படுகிற எதுவும் வெட்டி எறியப்படுகிறது.

கிறிஸ்து வைத்துச்சென்ற சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு கட்டப்படாத எதுவும் அவரது மாளிகையில் இடம்பெறுவது இல்லை.

மேலே சொன்ன கருத்திற்கான ஆதார வசனங்களை கீழே ஒவ்வொன்றாய் பதிவிடுகிறேன்:

Isa 28:16 ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன்; அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும், விசுவாசிக்கிறவன் பதறான்.

அப். 4:11-12 வீடுகட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாய் எண்ணப்பட்ட அவரே மூலைக்குத் தலைக்கல்லானவர். அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.

லூக்கா 20:17-18 அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று என்று எழுதியிருக்கிற வேதவாக்கியத்தின் கருத்தென்ன? அந்தக் கல்லின்மேல் விழுகிறவன் எவனோ அவன் நொறுங்கிப்போவான், அது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்றார்.

1பேதுரு 2:7-5 ஆகையால் விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையேறப்பெற்றது; கீழ்ப்படியாமலிருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால் தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலையுமாயிற்று; அவர்கள் திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்து இடறுகிறார்கள்; அதற்கென்றே நியமிக்கப்பட்டவர்களாயும் இருக்கிறார்கள்.

சபையின் நிறுவனர் (தலைவர்) இயேசு கிறிஸ்து. கொலோ. 1:18
அது கி.பி 33ம் ஆண்டு எருசலேமில் துவங்கப்பட்டது. அப். 2
அந்தக் கல்லின் மீது கிறிஸ்தவர்களான ஒவ்வொருவரும் கட்டப்பட்டு வருகிறார்கள். 1பேதுரு 2:5

ஆகவே, எந்தக் கல்லின் மீது கட்டப்பட்ட மாளிகையாக நீங்கள் இருக்கிறீர்கள் என்றும்;
தாங்கள் சார்ந்திருக்கும் சபையின் நிறுவனர் யார் என்றும்;
அது எப்பொழுது எங்கு துவங்கப்பட்டதென்றும் அறிந்துக்கொள்ளவேண்டியது அவசியம்.

கிறிஸ்துவின் கட்டளைகளுக்கு “மாத்திரம்” உட்பட்டே நமது கிறிஸ்தவ ஜீவியம் உள்ளதா அல்லது சார்ந்திருக்கும் நிறுவனத்தாரின் கூடுதல் அறிவுரைகளில் சிக்கியிருக்கிறோமா என்பதையும்;
கிறிஸ்து போதித்ததை அப்போஸ்தலர்கள் மூலமாய் பரிசுத்த ஆவியானவர் வேதாகமத்தில் எழுதிவைத்த உபதேசத்துடன் ஒப்பிட்டு பார்க்கவேண்டும்.


*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் – கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*—-*—-*—-*—-*—-*—–*